
எது இனிது?
ஆக்கிவைத்த உணவின்
அறு சுவையா இனிது?
தேக்கிவைத்த அன்பின்
திருவினையே இனிது!
படைத்துவைத்த காவியத்தை
படித்தலா இனிது?
படித்தவற்றை வாழ்வில்
கடைபிடித்தலே இனிது!
வடித்துவைத்த ஓவியத்தை
இரசித்தலா இனிது?
வடித்தவனின் கருத்தென்ன - அதைப்
பகுத்தறிதலே இனிது!
வாழ்ந்து மறைந்தவரை நாளும்
வாழ்த்தலா இனிது?
வாழ்ந்தவரைப் போல் நாமும்
வாழ்ந்து காட்டல் இனிது!
சொத்தைச் சேர்த்து வைத்துச்
சுவைத்தலா இனிது?
கொஞ்சமேனும் பிறருக்காகக்
கொடுத்து வாழ்தல் இனிது!
மது மங்கை இவை தரும்
மயக்கமா இனிது?
மனைவி மக்கள் மகிழ வீட்டில்
வாழும் வாழ்க்கையே இனிது!
கேட்டவுடன் பொருளையள்ளிக்
கொடுத்தலா இனிது?
கேட்கும் பாத்திரத்தின்
தன்மையறிதலே இனிது!
துயிலெனப் படுக்கையை
விரித்தலா இனிது?
விரித்த படுக்கையில் உடனே
விழி மூடிப் போதல் இனிது!
எல்லாம் அவன் செயல் - என
சொல்லலா இனிது?
ஏனிந்தக் கோலம் - என
எண்ணும் செயலே இனிது!
எண்ணம் சொன்ன செய்திகளை
ஏட்டில் எழுதலா இனிது? அதை
எடுத்துப் படிப்பவர் மனத்திரையில்
இடம்பிடித்தலே இனிது!
4 comments:
மிக அருமையான ஆக்கம். வாழ்க ! வளர்க ! வாழ்த்துக்கள்.
அகமது கபீர், ஜெட்டா, சவூதி அரேபியா.
அருமயான கவிதை ஐயா!
எல்லா வரிகளையும் ரசித்தேன்.
அவற்றுள் இந்த வரிகள் பிரமாதம்:
///விரித்த படுக்கையில் உடனே
விழி மூடிப் போதல் இனிது!///
இந்தக் காலத்தில்
எத்தனை பேருக்கு
இப்படி விழிமூட முடிகிறது?!
திருவை ரசிகன்,
திருவிதாம்கோடு.
-
மிக்க நன்றி அருமைத்தோழன் அகமது கபீர் அவர்களே!!!
ஐயா திருவை ரசிகன்,
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!
நீங்கள் கூறியது உண்மையே.
என் பிஞ்சுக்கவிதைகள் கூட என் உறக்கம் வரா இரவுகளில் பிறந்த உள்ளக்குழந்தைகள்தான்...
Post a Comment