Tuesday, May 12, 2009

என் தமிழே! இவர்களின் கூட்டத்திலா?

சிறுத்தையொன்று
சிறுநரியானதால்
கொழுத்த ஓநாய்களுக்கு
இங்கே
கொண்டாட்டம்!

ஆச்சாணியில்லா
அரக்குத் தேரில்
முரட்டு
ஊர்வலம்!

பொதுச் சேவைப் போர்வைக்குள்
வெடி குண்டு மூட்டைகளை
தவப்பெட்டிகளாய் -
தாங்கி நடக்கும்
கபட சந்யாசக் கூட்டம்!

தளிர்களைத் தள்ளிவிட்டு
வேர்களுக்கு விழாயெடுக்கும்
சந்தர்ப்பவாத
சாக்கடைகள்!

போர்க்களம் செல்லாமலே
புண்களுக்கு
மருந்து பூசும்
பொய்யான சூரர்கள்

மனங்களை வேகவிட்டு
பணங்களை
எண்ணத்துடிக்கும்
சுயநலக் குள்ள நரிகள்!

உழைக்காமல்
ஸ்தானம் தேடி
உயிர்பதவியில் அமர்ந்து கொண்டு
சளைக்காமல் பொய் பேசும்
சதிகாரக் கூட்டங்கள்!

எடுபிடி வேலைக்காய்
எம் போன்றோரை அமர்த்திவிட்டு
கொடி தாங்கும் வாகனங்களில்
சட்டைக் காலர்களை
உயர்த்தி உட்காரும்
யோக்கியர்கள்!

அன்னைத் தமிழே!
இவர்களின் கூட்டத்திலா
இத்தனை நாளும்
என்னை நீ
அலையவிட்டாய்?