Saturday, January 31, 2009


நலம் வாழ்வோம்!

பரபரப்பான உலகிலே
துருதுருப்பான இளைஞரே!
சுறு சுறுப்பாய் உழைக்கவே
விறுவிறுப்பாய் வாருங்கள்!

அவன் உயர்ந்தான்
இவன் சரிந்தான்
என்ற பேச்சே நமக்கெதற்கு?
நாம் உழைப்போம் நலம் பிழைப்போம்
ஓடி வாருங்கள் தோழர்களே - இனியும்
ஓய்ந்து கிடந்தால் நாம் வீணர்களே!

எட்டிப்பார் வெளியுலகை - நீ
நாட்டிப்பார் உன் உழைப்பை!
வெற்றிக் கனிகள் உன் கையில்
நிச்சயம் வந்து விளையாடும்!

நாட்டை வீட்டை ஒரு போல் உயர்த்த
நண்பர்கள் ஒன்றாய் செயல்படுவோம்!
கோட்டை ஏறி அரசும் அமைத்து
குடிநலம் பேன ஆண்டிடுவோம்!

ஊழல் அற்ற ஒரு சமுதாயம்
உழைக்கும் வர்க்கத்தால் வரவேண்டும்!
யாரும் எதையும் சாதிக்கும் - உண்மை
ஜனநாயகம் உயிர் பெற வேண்டும்!


நாளையும் உரைத்திடு!

உள்ளம் உரைப்பது உண்மையென்றால்
உனக்கு ஏது துன்பமடா?
கள்ளம் இல்லா நெஞ்சினிலே ஊறும்
கருணைக்கு ஏது பஞ்சமடா!

பொல்லா மனிதர் உலக மடா - இதைப்
புரிந்து நீயும் செயல்படடா!
நாளைப் பொழுதும் நிச்சயமே! நீ
நாளையும் உரைத்திடு சத்தியமே!

நேர்வழி சென்றே ஜெயித்திடடா - புவியில்
நெறிகெட்ட மாந்தரைச் சிறையிடடா!
இன்னலில் தவிக்கும் மக்களுக்கு - உன்னால்
இயன்றதைச் செய்திட முனைந்திடடா!

பாரத நாட்டின் தன்மானம் - உன்
நெஞ்சினில் என்றும் நிற்கட்டும்!
தீரனாய் நீயும் வாழ்ந்திடடா - தியாகத்
தீயில் உன்னைச் சுட்டெடடா!

ஒரு தாய் மக்கள் எல்லலோரும் - எனும்
உணர்வை நாளும் வளர்த்திடுவாய்! நீ
இந்தியத் தாயின் இளைய மகன்
என்பதை என்றும் மறவாதே!



எது இனிது?


ஆக்கிவைத்த உணவின்
அறு சுவையா இனிது?
தேக்கிவைத்த அன்பின்
திருவினையே இனிது!

படைத்துவைத்த காவியத்தை
படித்தலா இனிது?
படித்தவற்றை வாழ்வில்
கடைபிடித்தலே இனிது!

வடித்துவைத்த ஓவியத்தை
இரசித்தலா இனிது?
வடித்தவனின் கருத்தென்ன - அதைப்
பகுத்தறிதலே இனிது!



வாழ்ந்து மறைந்தவரை நாளும்
வாழ்த்தலா இனிது?
வாழ்ந்தவரைப் போல் நாமும்
வாழ்ந்து காட்டல் இனிது!

சொத்தைச் சேர்த்து வைத்துச்
சுவைத்தலா இனிது?
கொஞ்சமேனும் பிறருக்காகக்
கொடுத்து வாழ்தல் இனிது!

மது மங்கை இவை தரும்
மயக்கமா இனிது?
மனைவி மக்கள் மகிழ வீட்டில்
வாழும் வாழ்க்கையே இனிது!

கேட்டவுடன் பொருளையள்ளிக்
கொடுத்தலா இனிது?
கேட்கும் பாத்திரத்தின்
தன்மையறிதலே இனிது!

துயிலெனப் படுக்கையை
விரித்தலா இனிது?
விரித்த படுக்கையில் உடனே
விழி மூடிப் போதல் இனிது!

எல்லாம் அவன் செயல் - என
சொல்லலா இனிது?
ஏனிந்தக் கோலம் - என
எண்ணும் செயலே இனிது!

எண்ணம் சொன்ன செய்திகளை
ஏட்டில் எழுதலா இனிது? அதை
எடுத்துப் படிப்பவர் மனத்திரையில்
இடம்பிடித்தலே இனிது!


வாழ்க தமிழ்!!!

வானவர் அமுதே!
வையகக் காற்றே!
தேனின் சுவையே!
செங்கரும்பின் சாறே!

விண்ணின் ஒளியே!
விசும்பின் மழையே!
சொல்லின் சுவையே!
சுவைதரும் கனியே!

பொதிகைத் தென்றலே!
பொக்கிசப் புதையலே!
அரும் மருந்தே!
அரிய விருந்தே!

மலரின் மணமே!
நதியின் சுகமே!
ஒலியின் உயிர்ப்பே!
உணர்வின் துடிப்பே!

இளமையின் உருவே!
இனிமையின் வடிவே!
வண்டமிழே! செந்தமிழே!
வாழ்க! நீ வாழ்கவே!