Tuesday, April 28, 2009


மணவாழ்க்கைச் சட்டம்!

இள மனங்களைக்
கேட்க்காமலே
இங்கு
திருமணங்கள்
நடத்தப்படுகின்றன!

இருவரின்
இதய அபிலாசைகள்
புதை குழிக்குள்
புகுத்தப்படுகின்றன!

வேகும் தீயின் முன்னே…
அய்யர் ஓதும்
வேதத்தின் வேகத்தில்
வேதனைகளை மறைத்துக் கொண்டு
மாலைகள்
மாற்றப்படுகின்றன!

முடிந்துண்டு விலங்கால்
விரல்கள்
பூட்டப்பட்டு
இல்லறக் கைதிகளாய்
மணவறை வலம்
கட்டாயமாகின்றது!

அக்கினி சாட்சியாய்
இருவரை
சமுதாயம்
ஆயுட் கைதிகளாய்
ஆக்கி விட்டது!

ஏமாந்த மனங்களில்
ரணவேதனை!
இருந்த போதும் -
உலகிற்கு
சொர்க்கப்படம்
காட்டப் படுகிறது!

வேம்பாக மாறிய
வேளையிலும்
பால் - பழச் சடங்கு
பறிமாற்றம் நடக்கிறது!

ஓரிலையில்
அமர்ந்த போதும்
இருவரின்
இதயப் பயணங்களும்
வேறு வேறு பாதையில்த்தான்!

கட்டாயத் திருமணங்கள்
காலத்தால் -
உடைக்கப்பட வேண்டும்!
இன்னாரை இன்னார்
இனங்கண்டு
மனம் உவந்து
ஏற்றுக் கொள்ளும் மணவாழ்க்கை
சட்டமாக மாற வேண்டும்.
அதைச் சமுதாயத்
திட்டமாக ஏற்க வேண்டும்!